வனக் குறிப்புக்கள்: ஒன்று

காலம்: 2021-07-14, காலை 10 மணிகள்.

எமது மோட்டார் வாகனம் ஹோரோபோத்தன தேசிய பூங்காவின் நுழைவாயிலில் அமைந்திருந்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரசபையின் அலுவலகத்தைச் சென்றடைந்திருந்தது. என்னுடன் இன்னொரு விலங்கு மருத்துவரும், இரு வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளும், ஓர் வாகன ஓட்டுனரும் இருந்தார்கள்.

“Horowpathana Elephant Holding Ground (HEHG) இல் நுழைவாயிலிலிருந்து அண்ணளவாக 13 km தொலைவில் அடர்வனப் பகுதியில் அழுகிய நிலையில் இறந்த யானை ஒன்றின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.” இதுவே முன்னைய நாள் இரவு எமக்குக் கிடைத்த செய்தி. இலங்கையில் வனப்பகுதியில் எங்காவது இறந்த யானையின் உடல் கண்டுபிடிக்கப்படின், அவ் வனப்பகுதிக்குப் பொறுப்பான விலங்கு மருத்துவர் அப் பகுதிக்கு உடனடியாகச் சென்று மரண உடற்கூற்றுப் பரிசோதனை (Postmortem examination) மூலம் மரணத்திற்கான காரணத்தினைக் கண்டுபிடிப்பதுடன், முக்கியமாக அம் மரணத்தினையும் பதிவுசெய்ய வேண்டும். அதன் போது அவ் உடலின் புவியியல் அமைவிடத்தினையும் (x அகலாங்கு, y நெட்டாங்கு) பதிவுசெய்ய வேண்டும். ஏனெனில் வேறொரு நாளில் அவ் உடலின் எஞ்சிய பாகங்களைக் கண்டுபிடிக்கும் நபர்கள் அதனை இன்னொரு மரணமாகப் பதிவுசெய்யும் வாய்ப்புக்கள் உண்டு. (முக்கியகுறிப்பு: இறந்த யானையின் உடற்பாகங்கள் ஏனைய காட்டு விலங்குகளால் அதிகளவு தூரங்களுக்கு எடுத்துச் செல்லப்படமுடியாதவை.)

நுழைவாயிலில் அமைந்திருந்த அலுவலகத்திற்குச் சென்று மேலதிக தகவல்களை எடுத்துக்கொண்ட பின், வனப் பகுதியினுள் செல்லத் தயாரானோம். முன்னைய நாள் அவர்கள் எடுத்த புகைப்படங்களின் மூலம், உடல் நன்றாக அழுகியிருப்பதையும், அதுவோர் புதர்கள் நிறைந்த அடர் வனப்பகுதியில் இருப்பதனையும் உணர்ந்து கொண்டோம். எம்முடன் அந்த வனப்பகுதிக்குப் பொறுப்பான, அத்துடன் இறந்த உடலின் அமைவிடம் ஓரளவிற்குத் தெரிந்திருந்த வனப் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் இணைந்துகொண்டார். அவரிடமிருந்து மேலும் சில சிக்கலான விடயங்களை அறிந்துகொண்டோம். தேசிய பூங்கா பகுதி சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்பட்டு ஒரு வருடங்களுக்கு மேலான நிலையில், வாகனம் செல்லக்கூடிய பாதைகளில் முட்புதர்கள் வளர்ந்துள்ளதாகவும், மனித நடமாட்டமின்மையால் சிறுத்தை, கரடி (Sloth bear), யானை போன்ற விலங்குகளும் பாதைகள் வழியே பகல் வேளைகளில் நடமாடுவதாகவும் அறிந்துகொண்டோம். இவற்றைக் கேட்ட பின்னர், எம்முடன் வந்த அதிகாரிகள் இருவரும் தமது பாதுகாப்புத் துப்பாக்கிகளையும், விலங்குகளை மயக்கக்கூடிய துப்பாக்கிகளையும் சரிபார்த்துக்கொண்டார்கள்.

இதுவே இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது Elephant Holding Ground. 2015 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கையின் எப்பகுதியிலிருந்தும் பாதிக்கப்பட்ட யானைகள் இங்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு, இப் பகுதியினுள் விடப்படும். 2300 ஏக்கர் பரப்பளவுகொண்ட இப் பகுதி, மின்சார வேலிகளால் எல்லைப்படுத்தப்பட்டிருப்பதனால், யானைகள் வெளியேறவோ அல்லது உள்நுழையவோ முடியாது. ஆனால் கடந்த சில வருடங்களாக இப் பகுதியினுள் யானைகளின் இறப்பு வீதம் அதிகரித்துள்ளமை பதிவாகியுள்ளது. அது சார்ந்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் எமக்குத் தரப்பட்டிருந்தது.

நுழைவாயிலிலிருந்து ஒரு கிலோமீற்றர் தாண்டும் முன்னமே வழியின் குறுக்கே மரமொன்றின் பாரிய கிளை முறிந்து வீழ்ந்திருப்பதைக் கண்டோம். அதனை அகற்றினால் மட்டுமே வாகனத்தில் மேற்கொண்டு பயணிக்க முடியும் என்ற நிலையில், 20 நிமிட போராட்டத்தின்பின் அதனை அகற்ற முடிந்தது. இந்த வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் பெரிய மழைவீழ்ச்சி காணப்பட்டதாகவும், அதனால் இதுபோன்ற பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் எம்முடன் வந்த அவ் வனப்பகுதிக்குப் பொறுப்பான அதிகாரி கூறினார். ஆகவே நாங்கள் மேலும் பல தடைகளை வழியில் எதிர்பார்த்தோம்.

வழியெங்கும் வளர்ந்திருந்த முட்புதர்களுக்கும், வீழ்ந்திருந்த மரக்கிளைகளுக்கும் மத்தியில் அப் பயணம் கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. ஆனாலும் வனங்கள் மற்றும் அவை தருகின்ற காட்சிகள் சார்ந்த எனது ஈர்ப்பு அப் பயணத்தின் சுவாரஸ்யத்தினைத் தக்கவைத்துக் கொண்டது. வனங்கள் போன்று தமது காட்சிகளை உடனுக்குடன் உங்களின் ஒவ்வொருவொரு பார்வைக்கோணங்களுக்கும் ஏற்ப மாற்றக்கூடிய இயற்கை வளத்தினை நீங்கள் எங்கும் கண்டடைய முடியாது. ஒவ்வோர் மரத்தின் பின்னாலும், ஒவ்வோர் நீர்நிலையின் பின்னாலும், ஏன் ஒவ்வோர் செடியின் பின்னாலும் கூட அதிசயங்களை வனம் ஒளித்து வைத்திருக்கும்.

இன்னும் சில கிலோமீற்றர்கள் சென்ற பின் பாதையின் குறுக்கே வாய்கால் போன்றதொரு பள்ளம் வந்தடைந்தது. சென்ற மழைவீழ்ச்சியின் போது நீரோட்டத்தால் மணல்களும், கற்களும் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும், வனங்களில் வெள்ளவோட்டங்கள் திடீரெனப் பாரியளவில் ஏற்படும் என்றும் எம்முடன் வந்த அந்த அதிகாரி கூறினார். அதனைத் தாண்டி வாகனத்தைக் கொண்டுசெல்ல முடியாத நிலையில், வாகன ஓட்டுனரை விட்டு, தேவையான பொருட்களுடன் பாதுகாப்புத் துப்பாக்கிகளையும் எடுத்துக் கொண்டு மேற்கொண்டு நாங்கள் ஐந்து பேரும் நடக்க ஆரம்பித்தோம்.

பாதைகள் நாங்கள் எதிர்பார்த்ததை விட மோசமானவையாகவே இருந்தன. நடக்க ஆரம்பித்து அரைமணி நேரங்களின் பின் மெதுவாக இறந்த உடலின் துர்நாற்றம் காற்றில் வீச ஆரம்பித்தது. இறந்த யானை ஒன்றின் உடலிலிருந்து வீசும் துர்நாற்றம் பல கிலோமீற்றர்கள் தாண்டியும் வீசக்கூடியது. நாலாபக்கங்களும் ஒரேமாதிரியாகவே இருக்கும் வனப்பகுதியில் இத் துர்நாற்றத்தினைப் பின்தொடர்ந்து சென்றால் இலகுவில் இறந்த உடல்களை அடைந்திட முடியும். நாமும் அதையே பின்பற்ற முடிவுசெய்திருந்தோம்.

போகும் வழியில் சிறுத்தையினால் வேட்டையாடப்பட்டு, உண்டு எஞ்சிய மான் (Sri Lankan Sambar Deer) ஒன்றின் உடலினைக் கண்டோம். அழுகிய நிலையிலிருந்த பாதி உடல். சிறுத்தையினால் வேட்டையாடப்பட்ட உடல்களினை இலகுவில் கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கும். உடலிலுள்ள காயங்களின் அடையாளங்கள், தரையில் அவ்வுடலினை இழுத்துச் சென்ற தடங்கள் ஆகியவை தனித்துவமானவை. மேலும் பயண வழியில் நரி (Sri Lankan Jackal) ஒன்றினையும் அதன் மூன்று குட்டிகளையும் கண்டோம். அதன் குட்டிகள் தோல் தொற்று (Skin rash) ஏற்பட்ட German Shepherd இன நாய்க்குட்டிகள் போன்றே தோற்றமளித்தன.

வழியில் ஓர் நீர்நிலையைச் சென்றடைந்தோம். அதற்கு அருகில் நடுத்தர வயதைச் சேர்ந்த மூன்று யானைகள் இளைப்பாறிக்கொண்டிருந்தன. அவற்றின் உடல்கள் மிகவும் மெலிந்து காணப்பட்டன. என்னுடன் வந்த மற்றைய விலங்கு மருத்துவர் மிகவும் அனுபவம் மிக்கவர். அவரிடம் அக் காட்டுப்பகுதியில் யானைகளின் உணவுப் பரவல் எவ்வாறு காணப்படுகின்றது எனவும், அதனை அதிகரிக்க எவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுக்கலாம் எனவும், அம் முன்னெடுப்புக்களிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் பற்றியும் கலந்துரையாடியவண்ணம் பயணத்தைத் தொடர்ந்தோம்.

காற்றில் துர்நாற்றம் அதிகரிப்பதன் மூலம் நாம் உடலினை நெருங்கிவிட்டோம் என்பதனை உணர்ந்துகொண்டோம். அனைவரும் Fly repellent spray இனை எமது உடல்களில் பூசிக்கொண்டோம். உயிரோடிருக்கும் யானைகளின் உடலில் உண்ணிகள் (Ticks), தெள்ளுகள் (Fleas) மற்றும் பேன்கள் (Louse) போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகள் அதிகளவில் காணப்படும். யானை இறந்த பின்னர், தமக்குரிய உணவு இல்லாதுபோகுமிடத்து அவை அருகிலுள்ள மரங்கள், செடிகளில் ஏறி அமர்ந்துகொண்டு தமது புதிய உணவுவழங்கிக்காய் காத்திருக்கும். அந்நேரம் யானையின் உடலை உண்ண வரும் விலங்குகளில் பாய்ந்து ஒட்டிக்கொள்ளும். இவை பருமனில் மிகவும் சிறியவையாக இருப்பதனால் எமது உடலில் இருப்பினும் எம்மால் கண்டுபிடித்தல் என்பது கடினமான விடயம்.

ஒருவாறாக உடலினை அடைந்தவேளையில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. உடல் பெருமளவில் அழுகியிருந்த நிலையில், சிலபகுதிகள் ஏனைய விலங்குகளால் சிதைக்கப்பட்டிருந்தன. உடல் சிதைவடைந்திருந்ததனால் தந்தங்கள் இரண்டையும் இலகுவில் பிடுங்கியெடுக்கக் கூடியதாக இருந்தது. தந்தங்களின் பருமன் மற்றும் ஏனைய உடற்பாகங்களின் அடிப்படையில் அதுவோர் வயது முதிர்ந்த யானை எனக் கண்டடைந்தோம். வெளிப்புறக் காயங்கள் எவையும் இன்மையால் மரணம் இயற்கையானது என்ற முடிவிற்குவந்த நாம் சில மாதிரிகளையும் சேகரித்துக்கொண்டோம். அத்துடன் அவ்வுடலின் புவியியல் அமைவிடத்தையும் இணையத்தில் குறித்துக்கொண்டோம்.

‘ஒவ்வோர் யானையின் மரணமும் ஓர் புதிய நட்சத்திரத்தினை உருவாக்குகின்றது’ என கிரேக்க மொழிக் கதை ஒன்றில் வாசித்த ஞாபகம் வந்தது. புன்னகையுடன் வானத்தினை அண்ணாந்து பார்த்துக்கொண்டேன்.

இறந்த உடல் இருந்த இடத்தினை விட்டு நீங்கும் போது மாலை 3 மணிகள் ஆகியிருந்தது. ஒருவாறாகத் தேடியலைந்து வாகனம் நிறுத்தியிருந்த இடத்தினை வந்தடைந்தோம். பேசிக்கொள்வதற்கு வழியெங்கிலும் நிறைய விடயங்கள் இருந்தன. பாதைகளிலிருந்த தடைகளை போகும் போதே இயலுமான வரையில் அகற்றிவிட்டதால் திரும்பி வருவதில் பெருமளவில் சிரமங்கள் இருக்கவில்லை. நுழைவாயிலிலிருந்த அலுவலகத்தை வந்தடையும் போது மாலை 4.30 மணிகள் ஆகியிருந்தன. அங்கு அலுவலகப் பதிவுகள் அனைத்தையும் முடித்துவிட்டு சேகரித்த மாதிரிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் அநுராதபுரம் நோக்கிப் பயணப்பட ஆரம்பித்தோம்.

¬Kasro Ponnuthurai

Comments

Popular Posts