நேசித்தல்: ஆரம்ப அத்தியாயம் முதல் இறுதி அத்தியாயம் வரை
ஆரம்ப அத்தியாயம்
01
கார்காலம் ஒன்றில்
வீடு வந்த
மின்மினிப்பூச்சி ஒன்றை
நீங்க மனமின்றி
உள்ளங்கையில் பொத்திக்கொள்ளும்
ஓர் குழந்தையைப் போல்
உன்னைப் பற்றிக்கொள்கிறேன்.
அன்பே,
நிரந்தரமில்லா
இந் நிகழ்நிலைக் காலத்தில்
நகர்ந்துகொண்டிருக்கையில்
யாவுமே நிச்சயமற்றவை.
எனினும்
நான் ஏன் உன்னை நேசிக்கிறேன்?
02
ஓர் வெள்ளைநிறப் பட்டாம்பூச்சி
என் கைகளில்
வந்தமர்ந்த நாள் ஒன்றில்
முதன்முதலாக
நீ என்னை
முத்தமிட்டாய்.
அப்போது
வடநிலத்து
பைன் மரக் காடுகளில்
இலையுதிர் காலம்
தொடங்கிக் கொண்டிருந்தது.
அன்பே,
ஓர் இலை உதிர்கையில்
எங்கோ ஓர் பூ
பூக்கத்தான் செய்கிறது.
(வெற்றிடம்)
இறுதி அத்தியாயம்
01
கொலை செய்யப்பட்ட
நம்பிக்கை ஒன்று
வெற்று உடலமாய்
நடுமுற்றத்தில் கிடத்தப்பட்டுள்ளது.
‘ஏன் உன் கண்கள் சிரிக்கவில்லை?’
என்ற கேள்வியுடன்
உறவினர்கள் வந்துகொண்டிருக்கின்றார்கள்.
நானோ
நீ திறந்து சென்ற மனக்கதவின்
இடுக்கில் மாட்டிக்கொண்டு
துடித்துக்கொண்டிருக்கும்
ஓர் சிவப்புநிற அட்டையை
வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.
சாவீடு
தொடங்கிக்கொண்டிருக்கிறது.
02
படகுகளை நீங்காத் துறைகள்
முயற்சியில்
சற்றும் தளராத விக்கிரமாதித்தன்
குதிரையில் ஏறி விரைகிறான்.
அதோ
மறுபடியும் வேதாளம்.
03
பறவைகளை நீங்காக் கிளைகள்
மேய்ப்பரே,
எப்போதுமே
நான் உன் நேசத்திற்குரிய ஆடு.
~கஸ்ரோ பொன்னுத்துரை
“கசப்பான முடிவென்பது முடிவற்ற கசப்பு நிலையினை விடச் சிறந்தது”
~’About Elly (2009)’ திரைப்படத்திலிருந்து.


Comments
Post a Comment